சிவன் 14 - ௯. அருளும் வடிவங்கள் - ௯ 1. கங்கை சூடி, ௯ 2. கிராதர், ௯ 3. சண்டேசருக்கு அருளியவர், ௯ 4. திருமாலுக்கு அருளுதல், ௯ 5. அடியவர்களுக்கு அருளுதல்

௯-1. கங்கை சூடி

தொன்மம்

பகீரதன் அயோத்தியை ஆண்ட சூரிய குல மன்னன். ராமனின் முன்னோன். இறந்து விண்புக இயலாமல் தவித்துக் கொண்டிருந்த அவனது மூன்றாம் தலைமுறை முன்னோர்களின் ஆவிகளைக் கரையேற்ற வான்நதி கங்கையை மண்ணுக்குக் கொண்டுவர வேண்டி இருந்தது. பகீரதன் செய்த கடும் தவத்தால் நான்முகன் கங்கையை மண்ணுக்குச் செல்லப் பணித்தார். அவள் பெரு வேகத்தை மண்ணுலகம் தாங்காதென சிவனை வேண்ட அவர் கங்கையைத் தன் சடையில் ஏந்தி பின் மெதுவாக மண்ணில் வழியச் செய்தார்.

சிற்ப அமைதி

சிவன் வலது கால் நேராகவும் இடது கால் சற்று மடிந்தும் நிற்கிறார். சடை மகுடம். நான்கு கைகள். பின் கைகளில் மழு மான். சிவனின் ஒரு வலது கை தலை வரை உயர்ந்து சடை ஒன்றைப் பிடித்திருக்க மேலுடல் மட்டும் தெரிய கங்கை அதில் இறங்குகிறாள். இந்த அடிப்படை அமைதியோடு இருவகைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.முதல் வகை சிவன் தனியாக, இரண்டாம் வகை சிவன் உமையோடு.

சிற்பங்கள்

௯-1-அ - கங்கை சூடும் சிவன் தனியாக. முன் வலக்கை சடையைத் தாங்க, இடக்கை தொடையில்.

௯-1-அ-கங்கைசூடி உமை இன்றி.
36கால் மண்டபம் தூண் வ1கி3

௯-1-ஆ - கங்கைசூடி உமையுடன். மழு ஏந்தும் வலப் பின் கை சடை தாங்குகிறது. இடது முன் கை உமையை அணைத்திருக்க வலது கை அவள் தாடைக்குக் கீழ் உமையை அமைதிப்படுத்தும் நிலையில் உள்ளது. உமையின் கண்கள் விரிந்து முகம் கோபத்தைக் காட்டுகிறது. அவள் கால்கள் இடப்புறம் திரும்பி சிவனை விட்டு விலகும் நிலையில் உள்ளன. உமையின் இடது கை தொங்க வலது கை மலர் ஏந்தும் நிலையில் உள்ளது.

௯-1-ஆ-கங்கைசூடி உமையடன்.
36கால் மண்டபம் தூண் தெ1கி4



௯-2. கிராதர்

தொன்மம்

பாண்டவர்கள் நாட்டை இழந்து மறைவு வாழ்க்கை வாழ்ந்த போது அருச்சுனன் தன் ஆயுத வலிமையைக் கூட்டிக் கொள்ளும் பொருட்டு சிவனிடம் இருந்து பாசுபதக் கணையைப் பெற எண்ணினான். இமயமலை சென்று கடும் தவம் செய்தான். சிவன் மற்றொரு திருவிளையாடல் புரிய எண்ணம் கொண்டார். சிவன் வேடன் ஆகவும் உமை வேடத்தியாகவும் வேடம் பூண்டு அருச்சுனனின் தவநிலைக்கு வந்தனர். அப்போது ஒரு அசுரன் பன்றி வடிவில் அருச்சுனனைக் தாக்க முயல சிவ வேடன் அருச்சுனன் இருவரும் ஒரே சமயத்தில் அம்பு எய்து பன்றியைக் கொன்றனர். இருவருக்கும் வாய்ச் சண்டையில் தொடங்கி போர் மூண்டது. விற்போர் வாட்போர் மற்போர் புரிந்தும் அருச்சுனனால் வேடனை வெல்ல முடியவில்லை. இவன் மானுடன் அல்ல இறைவன் என்று உணர்ந்த அர்ச்சுனன் வணங்கி வேண்ட சிவனும் உமையும் வேடம் கலைத்து விடைமேல் அமர்ந்து காட்சி அளித்தனர். சிவன் அருச்சுனனுக்கு பாசுபதக் கணை கொடுத்து அருளினார்.

சிற்பங்கள்

மேற்கண்டக் கதையின் காட்சிகள் 36 கால் மண்டபத் தூண் ஒன்றில் (வ4கி5) சித்தரிக்கப்பட்டுள்ளன.

௯-2-அ - அருச்சுனன் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் தன் உடன்பிறந்தோர் நால்வரிடம் இருந்து தவம் புரிவதற்காக விடைபெறுதல்.

௯-2-அ-அருச்சுனன் தவம் செய்ய தன் உடன்பிறந்தோரிடன் விடை பெறுதல்.
36கால் மண்டபம் தூண் வ4கி5

௯-2-ஆ - வில்லுடன்அருச்சுனன்.

௯-2-ஆ-அருச்சுனன் வில்லுடன்.
 36கால் மண்டபம் தூண் வ4கி5

௯-2-இ - அருச்சுனன் ஒற்றைக்காலில் நின்று கடும் தவம் புரிதல். பின்னால் பன்றி அசுரன்.

௯-2-இ-அர்ச்சுனன் ஒற்றைக் கால் தவம்.
 36கால் மண்டபம் தூண் வ4கி5

௯-2-ஈ - சிவ வேடன் அம்பு எய்து பன்றியைக் கொல்லுதல். அருகில் குழந்தை முருகனுடன் பார்வதி.

 (36கால் மண்டபம் தூண் வ4கி5)

௯-2-உ - அருச்சுனனும் வேடனாக வேடம் பூண்ட சிவனும் விற்போர் புரிதல்.

(36கால் மண்டபம் தூண் வ4கி5)

௯-2-ஊ - அருச்சுனனும் வேடனும் வாட்போர் புரிதல்.

௯-2-ஊ-சிவன் அர்ச்சுனன் வாட் போர்.
 36கால் மண்டபம் தூண் வ4கி5

௯-2-எ - அருச்சுனனும் வேடனும் மற்போர் புரிதல்.

(36கால் மண்டபம் தூண் வ4கி5)

௯-2-ஏ - சிவனும் உமையும் விடைமேல் அமர்ந்து அருச்சுனனுக்குக் காட்சி கொடுத்தல்.

௯-2-ஏ-சிவன் உமையுடன் விடை மேல் அருச்சுனனுக்குக் காட்சி தருதல்

௯-2-ஐ - அருச்சுனன் ஒற்றைக்காலில் தவம் செய்யும் காட்சி தனிச் சிற்பமாகவும் காணப்படுகிறது.

௯-2-ஐ-அருச்சுனன் தவம்-இராஜகோபுர பெருவாயில் தெமே முகப்பு



௯-3. சண்டேசருக்கு அருளியவர்

தொன்மம்

சோழ நாட்டு திருசேய்ஞ்சலூரில் எச்சதத்தன் பவித்திரை என்ற அந்தணர்களின் மகன் விசாரசருமன். சிறுவயதிலேயே கற்க வேண்டியவைகளைக் கற்றுத் தேர்ந்தான். ஒரு நாள் ஒரு இடையன் தான் மேய்க்கும் பசுவை அடிப்பதைக் கண்டு மனம் பொறாது தானே அந்த பசு நிரைகளை மேய்க்கத் தொடங்கினான். பசுக்களின் உடல் நலம் சிறந்து மடி பெருத்து முன்னைவிட மிக்க பால் பொழியத் தொடங்கின. விசாரசருமன் ஆற்றங்கரையில் தினமும் ஒரு மணல் லிங்கம் உருவாக்கினான். பசுக்கள் பொழியும் மிகைப் பாலை குடத்தில் வாங்கி சிவலிங்கத்திற்கு முழுக்காட்டி வழிபட்டு வந்தான். இதைக் கண்ட ஒருவன் விசாரசருமனின் தந்தையிடம் புகார் கூறினார். மறுநாள் மறைந்திருந்து பார்த்த எச்சதத்தன் கோபமுற்று வழிபாட்டிற்காக வைத்திருந்த பால் குடத்தை காலால் எத்தி விட்டார். தந்தை என்றும் பாராது சிவ நிந்தனையை தண்டிக்க விசாரசருமன் ஒரு கோலை எடுக்க அது மழுவாக மாறிற்று. பால் குடத்தை எத்திய காலை அதனால் வெட்டிவிட்டு வழிபாட்டைத் தொடர்ந்தான் விசாரசருமன். அவரது பக்தியை மெச்சிய சிவன் உமையுடன் காட்சி தந்து இனி நாமே உமக்கு தந்தை என்று கூறி விசாரசருமனுக்கு கொன்றை மாலை சூட்டி சண்டிகேசுவர பதவி அளித்தார்.

சிற்பம்

௯-3 - சிவன் ஒரு பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறார். மண்டல அமர்வு. பின் கைகளில் மழு மான். முன் இடது கை மடியில் இருக்க விசாரசருமரை நோக்கிய வலது கை சின் குறி தாங்கி இருக்கிறது. விசாரசருமன் மழுவுடன் கைகூப்பி வணங்கி நிற்கிறார். இருவருக்கும் சடைமுடி.

௯-3-அமர்ந்த நிலை சிவன். பக்கத்தில் வணங்கி ஆசி பெறும் சண்டேசர்
பெரியநாயகி பெருமண்டபம் வட மேற்குத் தூண்



௯-4. திருமாலுக்கு அருளுதல்

தொன்மம்

திருமால் சிவனை வழிபட்டு ஆழியைப் பெற்றார்.

சிற்பம்

௯-4 - அமர்ந்த சிவன். வணங்கி நிற்கும் திருமால்.

௯-4-மண்டல அமர்வில் சிவன் வணங்கும் திருமால்.
திருமண மண்டபம் தூண் தெ1கி3



௯-5. அடியவர்களுக்கு அருளுதல்


௯-5-அ - நேர் நின்ற நிலை சிவன். சடை மகுடம். பின் கைகளில் முழு மான். முன் வலது கை காக்க முன் இடது கை இடுப்பில். வலது பக்கம் சடை மகுடத்துடன் நின்றிருக்கும் ஒரு அடியவர்.

௯-5-அ-நின்ற நிலை சிவன் அருகில் அடியார்.
36கால் மண்டபம் தூண் தெ1கி4

௯-5-ஆ - நேரமர்வில் சிவன். அவர் வலப் பக்கம் வணங்கி நிற்கும் ஒரு அடியவர். சிவன் வலது கை நீட்டி அடியவரிடம் ஏதோ கூறுகிறார்.

௯-5-ஆ-அமர்ந்த சிவன் அருகில் அடியவர்.
திருமண மண்டபம் தூண் தெ6கி2

௯-5-இ - நேரமர்வில் சிவன். வலது பக்கம் வணங்கி நிற்கும் ஒரு அடியவர். சிவன் வலது முன் கையை அடியவர் தலை மீது வைத்துள்ளார்.

௯-5-இ-அமர்ந்த சிவன் அருகில் அடியவர்.
திருமண மண்டபம் தூண் தெ6கி2



Comments