சக்தி 1 - ௧. தேவி, ௨. உமை
௧. தேவி
சக்தி இறைவர்களின் மனைவிகளாகத் தோற்றம் கொள்ளும்போது பெறும் பொதுவான வடிவம் தேவி வடிவம். சிவன், திருமால், நான்முகன், முருகர், பிள்ளையார், ராமர் ஆகிய முதன்மை இறைவர்களோடு இருந்து அருளும் சாந்த வடிவம். ஒரு மனைவி எனில் இறைவனின் இடது பக்கமும் இருவர் எனில் இரு பக்கமும் அமைவர். சார்ந்திருக்கும் இறைவனையும் அமையும் பக்கத்தையும் கொண்டு பெயர் அமையும். எடுத்துக்காட்டாக, சிவனது இடது பக்கம் உமை, திருமாலின் வலது பக்கம் திருமகள் இடது பக்கம் நில மகள் முருகரின் வலது பக்கம் வள்ளி இடது பக்கம் தெய்வானை.
சிற்ப அமைதி
- தேனடை மகுடம்.
- இரு கைகள்.
- ஒரு கையில் மலர் ஏந்தி மற்ற கை தொங்க நின்ற கோலம். இறைவன் பக்கம் சாய்ந்த இரு வளைவு உடல் அமைதி.
- இறைவன் பக்கக் கை மலர் ஏந்தி இருக்க வெளிப்பக்க கை பக்கத்தில் தொங்கும் நிலை. இதனால் இறைவனின் வலப்பக்க தேவி இடது கையில் மலருடனும் இடப்பக்க தேவி வலதுகையில் மலருடனும் இருப்பர்.
- இரு தேவியரில் ஒருவருக்கு மார்க் கச்சை இருக்கலாம். எடுத்துக்காட்டாக திருமகளுக்கு. ஆனால், தேவிகாபுரச் சிற்பங்களில் அவ்வாறு காணப்படவில்லை.
- தேவிகாபுரத்து சிற்பங்களில் தூணின் ஒரு ஓரு சதுரத்தில் திருமால் முதலிய தெய்வம் இருக்க அடுத்த ஒரு அல்லது இரு பக்க சதுரங்களில் உரிய தேவி வடிவம் இடம்பெறுவதைக் காணலாம்.
![]() |
௧-தேவியர் 16 கால் மண்டபத் தூண் மே1 வ5 கீழ்ச் சதுரங்கள் கிழக்கு- திருமகள், வடக்கு - திருமால், மேற்கு - நிலமகள் |
௨. உமை
உமை சிவனோடு இருக்கும் சிற்பங்கள் சிவ வடிவங்களோடு விவரிக்கப் பட்டுள்ளன.
௨-1. இரு கை உமை
தேவி வடிவத்தில் இருந்து சில தனித்த அடையாளங்கள் பெற்றது இரு கை உமை வடிவம்.
௨-1-அ - இருகை உமை இடபத்துடன்
இடக்கை தொங்க வலக்கையில் மலர். பின்னால் நின்றிருக்கும் இடபம் தேவியை உமை என அடையாளம் காட்டுகிறது. இடபத்தின் தலை உமையின் வலப் பக்கம்.
![]() |
௨-1-அ-இருகை உமை இடபத்துடன் வெளித் திருச்சுற்று பிள்ளையார் சன்னிதி வடக்குத் தூண் |
௨-1-ஆ - திருவாசியின் உள் இடபத்துடன் இரு கை உமை.
பின்னால் இடபம் உமையின் இடப்பக்கம் தலை வைத்து நின்றுள்ளது. உமையின் வலக் கை தொங்க இடக் கையில் மலர்.
௨-2. நான்கு கை உமை
௨-2-இ - நான்கு கை உமை - சிவலிங்க வழிபாடு
![]() |
௨-1-ஆ-இருகை உமை. இடபத்துடன் திருவாசியின் உள். திருமண மண்டபம் தூண் தெ5 மே2 |
பெண் தெய்வங்களுக்கு நான்கு கைகள் இருக்கும்போது அவற்றில் ஆயுதங்களும் சின்னங்களும் அமைந்து தனித்துவமான அடையாளம் அமைந்து விடுகிறது. நான்கு கை உமையின் பின் கைகளில் பொதுவாக அங்குசமும் பாசமும் இருக்கும். முன் கைகளில் காத்தல் வழங்கல் குறிகள். பெரியநாயகி அம்மன் அடையாளமும் இதுதான். இடக்கை தொடையிலும் இருக்கலாம். நான்கு கை உமை வடிவங்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் காணப்படுகின்றன.
௨-2-அ - நான்கு கை உமை - நின்ற கோலம்.
௨-2-அ 1 - உமையின் நேர் நின்ற வடிவம்.
கைகளில் அங்குசம் பாசம் காத்தல் வழங்கல். சடை மகுடம். மார்க் கச்சை இல்லை.
![]() |
௨-2-அ 1-நான்கு கை உமை. நேர் நின்ற நிலை. 36 கால் மண்டபம் தூண் வ1கி4 |
௨-2-அ 2 - உமையின் சாய்வுடன் நின்ற வடிவம் (வைணவம்).
இடக்கை தொடையில். தேனடை மகுடம். மார்க் கச்சை உள்ளது
![]() |
௨-2-அ 2-நான்கு கை உமை நின்ற நிலை. 36 கால் மண்டபம் தூண் வ2கி2 |
௨-2-அ 3 - சாய்வுடன் நின்ற நிலை. சிங்கத்துடன்.
இடக்கை தொங்க வலக் கையில் மலர். பின்னால் சிங்கம். வலப்பக்கத் தலை.
![]() |
௨-2-அ 3 - நான்கு கை உமை நின்ற நிலை பின்னால் சிங்கம் திருமண மண்டபம் தூண் தெ3மே1 |
௨-2-ஆ - நான்கு கை உமை - அமர்ந்த கோலம்
௨-2-ஆ 1 - அரைத் தாமரை அமர்வு.
கைகளில் அங்குசம் பாசம், காத்தல் வழங்கல். சடை மகுடம்.
![]() |
௨-2-ஆ 1-நான்கு கை உமை அரைத் தாமரை அமர்வு. திருமண மண்டபத தூண் தெ6 கி2 |
௨-2-ஆ 2 - நேரமர்வில் உமை.
![]() |
௨-2-ஆ 2 - நான்கு கை உமை நேரமர்வு. வெளி 4 கால் மண்டபம் |
௨-2-ஆ 3 - நேரமர்வில் உமை. வலக் கையில் அங்குசத்திற்குப் பதில் சூலம்.
![]() |
௨-2-ஆ 3 - நான்கு கை உமை நேரமர்வு. வலப் பின் கையில் சூலம். 36 கால் மண்டபத் தூண் வ4 கி2 |
௨-2-இ - நான்கு கை உமை - சிவலிங்க வழிபாடு
௨-2- இ 1 - உமை சிவலிங்கத்தை மணி ஒலித்து தீபம் காட்டி வணங்குவது
![]() |
௨-2-இ 1 - நான்கு கை உமை மணி தீபத்துடன் சிவலிங்க வழிபாடு. 36 கால் மண்டபம் தூன் வ1 கி2 |
௨-2-இ 1 - உமை சிவலிங்கத்தைக் கைக் கூப்பி வணங்குவது
![]() |
௨-2-இ 2 - நான்கு கை உமை சிவலிங்கத்தை வணங்குவது. திருமண மண்டபம் தூண் தெ7கி3 |
௨-3. உமையின் தவம்
தொன்மம்
திருக்கைலாயத்தில் சிவனோடு அமர்ந்திருத்த உமை விளையாட்டாக அவர் கண்களைப் பொத்தினாள். சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து ஒளி மீட்டார் எனினும் இடையில் ஒரு கணம் பேரண்டம் இருளில் மூழ்கியது. அதற்குப் பிழையீடாக உமை பூவுலகில் பிறந்து கடுந்தவம் செய்தார். அவர் ஒரு மாமரத்தடியில் உருவாக்கி வழிபட்டு வந்த மணல் லிங்கம் சிவனது திருவிளையாடலால் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. உமை அதை அணைத்துக் காத்தாள். உமை தழுவக் குழைந்த சிவன் உமைக்கு அருளினார். இது காஞ்சிபுரம், திருச்சத்திமுற்றம் ஆகிய ஊர்களின் தல புராணம்.
சிற்பங்கள்
௨-3-அ - உமை தவம்
எரி நடுவில் இடது பெருவிரலை ஊன்றி வலது காலை மடித்து வைத்து வலது கையை தலைக்கு மேல் வைத்து தவம் செய்வது
![]() |
௨-3-அ-உமை எரி நடுவில் பெருவிரல் ஊன்றி ஒற்றைக் கால் தவம். 36 கால் மண்டபம் தூண் வ4 கி2 |
௨-3-ஆ - உமை தவத்தின் இன்னொரு காட்சி.
வலது கால் பெரு விரலை எரி நடுவில் ஊன்றி இடது காலை மடித்து வைத்து வலது கையை உள் திரும்பிய சின் குறியோடு மார்பின் முன் வைத்த நிலை. அருகில் ஒரு அடியவர்.
![]() |
௨-3-ஆ-உமை தவம் உடன் ஒரு அடியவர் தேர் மைய மண்டபம் தூண் கி1வ2 |
௨-3-இ - உமை நீரில் முழுகும் மணல் லிங்கத்தை அணைத்துக் காப்பது.
![]() |
௨-3-இ-உமை தவம்-மணல் இலிங்கத்தை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற கட்டிப் பிடித்திருக்கும் உமை. 36 கால் மண்டபம் தூண் வ4 கி2 |
௨-3-ஈ - கபோத நாசியில் மேற்கண்ட தழுவக் குழையும் சிற்பம்.
![]() |
௨-3-ஈ-உமை தவம். உமை மணல் இலிங்கத்தைக் கட்டி அணைத்தல். இராஜகோபுர உபபீட நாசி |
உள்ளடக்கம்
Comments
Post a Comment