சிவன் 2 - ௨. தனித்த வடிவங்கள்

௨. தனித்த சிவ வடிவங்கள்


தேவிகாபுரத்தில் கீழ்க்காணும் தனித்த சிவ வடிவங்கள் உள்ளன:

௨-1. இலிங்கத்துதித்தவர்
௨-2. சதாசிவர்
௨-3. நேரமர்வு சிவன்
௨-4. மண்டல அமர்வில் சிவன்
௨-5. அரைத் தாமரை அமர்வில் சிவன்
௨-6. பிறைசூடி
௨-7. விடையேறி
௨-8. விடைக்கருளியவர்


௨-1. இலிங்கத்துதித்தவர்

தொன்மம்

திருமாலுக்கும் நான்முகனுக்கும் இடையே இருவருள் யார் பெரியவர் என்ற விவாதம் எழுந்தது. அப்போது அவர்கள் முன் அடி முடி காண ஒண்ணா பெரும் அனல் தூண் ஒன்று தோன்றியது. நான்முகன் அன்னமாக முடியைத் தேடியும் திருமால் பன்றியாக அடியைத் தேடியும் சென்றனர். இருவராலும் காண இயலவில்லை. திருமால் தோல்வியை ஒப்புக்கொள்ள நான்முகன் மேல் இருந்து இழிந்த தாழம்பூ ஒன்றை பொய் சாட்சியாகக் கொண்டு தான் முடியைக் கண்டு விட்டதாகக் கூறினார். அந்த அனல் தூணில் தோன்றிய சிவன் தானே அது என்று உணர்த்தினார். பொய் சொன்ன நான்முகனுக்குத் தனிக் கோயில் இல்லை என்று தண்டித்தார்.

சிற்ப அமைதி

இலிங்கத்துதித்தவர் சிற்பத்தில் அனல் தூணின் உள் சிவன் நிற்க கீழே பன்றி உருவ திருமாலும் மேலே அன்ன உருவ நான்முகனும் இருப்பர். கூடுதலாக திருமாலும் நான்முகனும் சிவனை வணங்கிய நிலையில் பக்கத்தில் நிற்பதும் உண்டு.

சிற்பங்கள்

௨-1-அ - இலிங்கத்துதித்தவர்.

௨-1-அ-இலிங்கத்துதித்தவர்.
திருமண மண்டபம் தூண் தெ1மே1

௨-1-ஆ - சிவன் கோயில் விமானத்தின் மேற்கு தேவகோட்டத்துக்கு உரிய தெய்வம் இலிங்கத்துதித்தவர். பெரியநாயகி கோயில் விமான மேற்கு தேவகோட்டம் வெறுமையாய் இருக்க அதன் மகர தோரணத்தில் இலிங்கத்துதித்தவர் உள்ளார்.

௨-1-ஆ-இலிங்கத்துதித்தவர்.
பெரியநாயகி விமானம் மேற்கு தேவகோட்ட மகரதோரணம்

௨-1-இ - காம ஈசுவரர் கோயில் விமான மேற்கு தேவகோட்டத்தில் லிங்கோத்பவரின் வலது பக்கம் நான்முகனும் இடது பக்கம் திருமாலும் வணங்கி நிற்கின்றனர்.

௨-1-இ-இலிங்கத்துதித்தவர் நான்முகன் திருமால்.
காம ஈசுவரர் மேற்கு தேவகோட்டம்


௨-2. சதாசிவர்

தொன்மம்

ஐந்து முகங்களுடனான சிவன். சிவனின் ஐந்து தொழில்களை ஐந்து முகங்கள் குறிக்கின்றன.

1. மேற்கு - சத்யோஜாதம் - படைத்தல்
2. வடக்கு - வாமதேவம் - காத்தல்
3. தெற்கு - அகோரம் - அழித்தல்
4. கிழக்கு - தத்புருஷம் - மறைத்தல்
5. வடகிழக்கு (மேல் முகம்) - ஈசானம் - அருளல்

சிற்பம்

திருமண மண்டபத் தூண் ஒன்றில் (தெ1கி3) மட்டுமே இந்த ஐந்து முக சிவ வடிவம் காணப்படுகிறது. சதாசிவர் அரைத் தாமரை அமர்வில் உள்ளார். பத்து கைகள். முன் கைகள் காத்தல் வழங்கல் கூறுகள் காட்ட, பின் கைகளில் சூலம் பாம்பு முதலான ஆயுதங்கள் உள்ளன. பக்கத்திற்கு ஒன்றாக நான்கு முகங்கள். மேலே ஈசானிய முகம்.

௨-2-சதாசிவன்.
திருமண மண்டபத் தூண் தெ1கி3


௨-3. நேரமர்வு சிவன்

சிற்ப அமைதி

பீடத்தின் மீது நேரமர்வில் அமர்ந்த கோலம். சடை மகுடம், நெற்றிக்கண். பின் இரு கைகளில் மழு மான், முன் இரு கைகளில் காக்கும் வழங்கும் குறிகள்.

சிற்பங்கள்

௨-3-அ - நேரமர்வு சிவன்.

௨-3-அ-நேரமர்வில் சிவன்.
36கால் மண்டபம் தூண் வ3கி2

௨-3-ஆ - திருவாசியின் உள் அமைந்த வடிவம்.

௨-3-ஆ-நேரமர்வில் சிவன் திருவாசியின் உள்.
திருமண மண்டபம தூண் தெ1மே1

௨-3-இ - இடது கை மடிமேல் வைத்த வடிவம்.

௨-3-இ-நேரமர்வில் சிவன்.
இட முன்கை மடி மேல் 36கால் மண்டபம் தூண் வ3கி5


௨-4. மண்டல அமர்வில் சிவன்

சிற்ப அமைதி

மண்டல அமர்வில் சிவன் மடித்த முழங்கால் மீது ஒரு கையை வைத்து மற்ற கையை பீடத்தின் மீது ஊன்றி அமர்ந்த கோலம். உடல் அமைதியும் பின் கைகளும் நேரமர்வு சிவன் போன்றவை.

சிற்பங்கள்

௨-4-அ - மண்டல அமர்வில் சிவன்.

௨-4-அ-மண்டல அமர்வில் சிவன்.
தேர் மைய மண்டபம் மே1வ2

௨-4-ஆ - வலது கை பீடத்தின் மீது இல்லாமல் நண்டுப் பிடிக் கையாக உள்ளது.

௨-4-ஆ-மண்டல அமர்வில் சிவன்.
திருமண மண்டப மேடை தூண் தெ1கி3

௨-4-இ - வல்து கை பீடத்தின் மீது இல்லாமல் நீட்டிய சுட்டு விரலுடன் முன் வலது கை மார்பின் முன் உள்ளது.

௨-4-இ-அமர்ந்த சிவன் வலக்கை மார்பு முன் சுட்டுவிரல் நீட்டி.
பொன்மலைநாதர் பெருமண்டபம் வட கிழக்குத் தூண்


௨-5. அரைத் தாமரை அமர்வில் சிவன்

அரைத் தாமரை அமர்வில் உள்ள சிவன். மற்றபடி நேரமர்வு சிவனைப் போன்றது.

௨-5-அரைத் தாமரை அமர்வில் சிவன்.
தேர் மைய மண்டபம் கி1வ1


௨-6. பிறைசூடி

சிற்ப அமைதி

நின்ற நிலை சிவ வடிவம். சந்திரனை தலையில் சூடியதால் இப்பெயர். நான்கு கைகள். பின் கைகளில் மழு மான். முன் வலது கையில் காத்தல். சடை மகுடம், நெற்றிக் கண், புலித் தோலாடை போன்ற சிவ அடையாளங்கள்.

சிற்பங்கள்

௨-6-அ - நேர் நின்ற நிலை - முன் இடது கை தொடையில்.

௨-6-அ-பிறைசூடி நேர் நின்ற நிலை. இட முன்கை தொடையில்.
36கால் மண்டபம் தூண் வ1கி4

௨-6-ஆ - நேர் நின்ற நிலை - முன் இடது கை வழங்கல்.

௨-6-ஆ-பிறைசூடி நேர் நிற்கை. இடக்கை வழங்கல்.
உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி1தெ1

௨-6-இ - வளைவுடன் நின்ற நிலை.

௨-6-இ-பிறைசூடி. வளைவுடன் நின்ற நிலை.
36கால் மண்டபம் தூண் வ5 கி6

௨-6-ஈ - முவ்வளைவுடன் நின்ற நிலை. சடைப்பாரம். முன் கைகளில் காத்தல் வழங்கல். பின் கை ஆயுதங்கள் மழு, சூலம்.

௨-6-ஈ-நின்ற நிலை சிவன். முவ்வளைவு. சடைப்பாரம்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ4கி2


௨-7. விடையேறி

விடை என்னும் இடபத்தின் மீது சிவன் தனித்து அமர்ந்திருக்கும் நிலை. பல சிற்பங்களில் உமையும் உடனிருக்க தனித்து விடை மேல் அமர்ந்த சிற்பங்கள் சிலவே. சிவன் விடையின் இருபக்கமும் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்கிறார். பின் கைகளில் மழு மான். வலது முன் கை காக்க இடது முன் கையை இடுப்பில் வைத்துள்ளார்.

௨-7-விடையேறி தனித்து.
உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி1வ1


௨-8. விடைக்கருளியவர்

இடபத்திற்கு அருளி அதன் முன் சிவன் நிற்கும் வடிவம் இது.

சிற்ப அமைதி

இடபம் சிவனுக்குப் பின்னால் தலை அவரது இடப்பக்கம் இருக்க நிற்கிறது. இடது காலை குறுக்காக மடித்து முவ்வளைவுடன் ஒயிலாக நிற்கும் சிவனின் பின் கைகளில் மழு மான். முன் வலது கை இடுப்பில் இருக்க முன் இடது கை மடிந்து இடபத்தின் தலைமீது படிந்துள்ளது. இடபம் தலையைத் திருப்பி சிவனின் புறங்கையை நக்குகிறது.

௨-8-அ - விடைக்கருளியவர்.

௨-8-அ-விடைக்கருளியவர்.
16 கால் மண்டபம் தூண் கி1வ4

௨-8-ஆ - மேலே சூரியன் சந்திரனுடன்.

௨-8-ஆ-விடைக்கருளியவர் மேலே சூரிய சந்திரர்.
36கால் மண்டபம் தூண் வ5கி4

௨-8-இ - இடபம் தலையைத் திருப்பாமல்.

௨-8-இ-விடைக்கருளிய விமலர். இடபம் தலை திருப்பாமல்.
திருமண மண்டபம் தூண் தெ1மே1

௨-8-ஈ - இடபத் தலை வலது பக்கம். சிவனின் வலது கால் குறுக்காக உள்ளது. சிவனின் வலது கையில் காக்கும் குறி.

௨-8-ஈ-விடைக்கருளியவர். இடபம் வலப்பக்கத் தலை. சிவனின் வலக்கையில் காத்தல் குறி.
36கால் மண்டபம் தூண் வ5கி2

௨-8-உ - இடபத் தலை வலது பக்கம். சிவன் கால் குறுக்காக இல்லாமல் நின்ற நிலை.

௨-8-உ-விடைக்கருளியவர். இடபம் வலப்பக்கத் தலை. குறுக்குக் கால் இல்லை. பெரியநாயகி பெருமண்டபம் வட மேற்குத் தூண்


Comments