சிவன் 6 - ௬ வசீகர வடிவங்கள்

௬. வசீகர சிவ வடிவங்கள்


௬-1. பிச்சாடனர்

சிவனின் வடிவங்களுள் பேரெழில் கொண்ட வசீகர வடிவங்கள் இரண்டு. பிச்சாடனரும் கங்காளரும். பிச்சாடனர் சிற்பங்கள் சிறப்பாகவும் மிகுந்த எண்ணிக்கையிலும் காணப்படுகின்றன.

தொன்மம்

தொடக்கத்தில் நான்முகன் ஐந்து தலைகள் கொண்டிருந்தார். நான்கு தலைகள் நால்வேதம் ஓதிக்கொண்டிருக்க மேலிருந்த ஐந்தாம் தலை சிவனை மதியாது தானே உலகின் முதல்வன் என தற்பெருமை பேசிக்கொண்டிருந்தது. சிவனை இழிவாகவும் பேசியது. சிவன் பைரவர் வடிவில் அந்த ஐந்தாம் தலையைக் கொய்தார். நான்முகன் செருக்கு அடங்கி சிவனின் மேன்மையை ஏற்றார். ஆயினும் அந்தணக் கொலைப் பாவம் பைரவரைப் பீடித்தது. நான்முகன் கபாலம் அவர் கையில் ஒட்டிக் கொண்டது. பிச்சை எடுத்து உண்டு பிழை ஈடு செய்ய வேண்டி வந்தது.

அச்சமயம் தாருகாவனத்து முனிவர்கள் வேத வேள்விகளையே உயர்வாகக் கொண்டு சிவன் திருமாலை மதியாது இருந்தனர். அவர்கள் செருக்கையும் அடக்க பைரவ சிவன் பிச்சாடனராகவும் திருமால் மோகினியாகவும் தாருகாவனம் சென்றனர். பிச்சை அளிக்க வந்த முனி பத்தினிகள் பிச்சாடனரின் பேரெழிலில் மயங்கி தன்னிலை இழந்து ஆடை நெகிழ அவர் பின் சென்றனர். அவ்வாறே மோகினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் அவள்பின் சென்றனர். தன்னிலை மீண்டபோது முனிவர்கள் கோபமுற்று வேள்விகள் மூலம் பிச்சாடனர் ஆகிய சிவனை அழிக்க முயன்று தோற்றனர். சிவன் திருமாலை முதன்மை தெய்வங்களாக ஏற்றனர்.

சிற்ப அமைதி

ஆடை அற்ற பிறந்த மேனியர். காண்பவர் மயங்கும் கட்டழகர். இடது காலை ஊன்றி வலது காலை உயர்த்தி நடக்கும் கோலம். அழகிய சடை மண்டல முடி அலங்காரம். புன்னகை தவழும் அழகிய வதனம். நெற்றிக் கண். வலது பின்கையில் உடுக்கை. இடது பின் கையில் கழுத்தின் பின்னால் குறுக்காகக் கிடத்திய சூலம். வலது பக்கம் எம்பி இருக்கும் நிற்கும் மான் ஒன்றுக்கு புல் ஊட்டும் வலது முன் கை. இடது முன்கையில் பிரமன் கபாலம். இடது பக்கம் பிச்சைப் பாத்திரத்தை தலைமேல் சுமக்கும் குள்ள பூதம். கால்களில் இவருக்கு உரிய சிறப்பு அணிகலனான பாத குறடுகள். இடையில் அரைஞாண் கயிறு மட்டும்.

சிற்பங்கள்

௬-1-அ- பிச்சாடனர்.

௬-1-அ-பிச்சாண்டவர்.
16கால் மண்டபம் தூண் மே1வ7

௬-1-ஆ,இ - தூணின் மற்ற மூன்று சதுரங்களில் உணவு அகப்பையுடன் பிச்சாடனருக்கு பிச்சை இடவும் அவரைக் காணவும் வந்த முனி பத்தினிகள்.

௬-1-ஆ-முனிபத்தினிகள்.
16கால் மண்டபம் தூண் மே1வ7

௬-1-இ-முனிபத்தினிகள்.
16கால் மண்டபம் தூண் மே1வ7

௬-1-ஈ,உ - பிச்சாடனர் குழுவில் பூதகணங்களும் வருவதுண்டு. கங்காளம் இசைத்தும், உத்தரீயத்தைப் பிடித்தும் நடந்து வரும் பூதகணங்கள்.

௬-1-ஈ-கங்காளம் இசைக்கும் பூத கணம்.
பிச்சாடனர் குழுவில் பெரு மண்டபம் வகி தூண்

௬-1-உ-உத்தரீயத்தைப் பிடித்திருக்கும் பூத கணம்.
பிச்சாடனர் குழுவில் பெருமண்டபம் வகி தூண்

௬-1-ஊ - இன்னொரு வசீகர பிச்சாடனர் வடிவம். அழகிய சடை மண்டலம். நுண்ணிய அணிகள். சூலத்தில் சுற்றிய ஒரு பாம்பு. இடையில் அரைஞாண் கயிறாக இன்னொன்று.

௬-1-ஊ-பிச்சாடனர்.
36கால் மண்டபம் தூண் வ4கி3

௬-1-எ,ஏ - சில சமயம் பிச்சை பெறும் ஆர்வத்தில் குள்ள பூதம் பிச்சாடனரிடம் இருந்து விலகி முனிபத்தினிகள் சதுரத்திற்கு செல்வது உண்டு.

௬-1-எ-பிச்சாடனர்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி1

௬-1-ஏ-இரு முனிபத்தினிகள் குள்ளபூதம்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி1

௬-1-ஐ - சில சமயம் முனிபத்தினிகள் குள்ள பூதத்தை விலக்கி நேரடியாக பிச்சாடனர் பக்கத்தில் வந்து விடுவதும் உண்டு.

௬-1-ஐ- பிச்சாடனர், முனி பத்தினி
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ5கி3


௬-1-ஒ - மானும் குள்ள பூதமும் இடம் மாற்றிக் கொள்வதும் உண்டு.

௬-1-ஒ-பிச்சாடானர். மானும் பூதமும் இடம் மாறி
 பெரியநாயகி பெருமண்டபம்

௬-1-ஓ,ஔ - மானும் பூதமும் இடம் மாறுவது மட்டுமல்ல, பிச்சாடனரும் இடக்கையராக மாறி இடது கையில் உடுக்கையும் வலது கையில் சூலமும் ஏந்துவதும் உண்டு.

௬-1-ஓ-இடக்கையாரான பிச்சாடனர்.
காம ஈசுவரர் கோயில்

௬-1-ஔ-இடக்கையாரான பிச்சாடனருடன் குள்ள பூதமும் முனி பத்தினியும்.
காம ஈசுவரர் கோயில்

௬-1-ஃ - சடை மண்டலம் பிச்சாடனருக்குரிய எழிலார்ந்த தலைக்கோலம். இராஜகோபுரப் பெருவாயில் வடமேற்குச் சுவரில் மட்டும் கிரீட மகுடம் தரித்துள்ளார்.

௬-1-ஃ-பிச்சாடனர்.
இராஜகோபுரம்





௬-2. கங்காளர்

தொன்மம்

நான்முகன் தலை கொய்த பைரவ சிவனின் ஒரு தொன்மம் பிச்சாடனர். மற்றொரு தொன்மம் கங்காளர். தான் அடைந்த அந்தணக் கொலை பாவத்தைத் தொலைக்க வழி தேடி திருமாலின் இருப்பிடத்திற்கு வந்தார். திருமாலின் படைத் தளபதி விஷ்வக்சேனர் அவரை வழிமறிக்க பைரவர் அவரைக் கொன்று அவருடைய எலும்புக் கூட்டை ஒரு தண்டத்தில் குத்தி எடுத்துக்கொண்டார். கங்காளம் என்பது எலும்புக் கூடு. அதனால் கங்காளரானார். திருமால் பைரவரின் தலை நாளம் ஒன்றை வெட்டிக் குருதியை கபாலத்தில் இட்டு உணவாகத் தந்தார். அவர் கூறியபடி பைரவர் காசிக்குச் சென்று பாவ விடுதலை பெற்றார். பயணத்தின் போது கங்காளர் பிச்சை எடுக்க பெண்கள் அவர் அழகில் மயங்கி தன்னிலை இழுந்து பின்தொடர்ந்தனர்.

சிற்ப அமைதி

கங்காளருடைய சிற்பம் பிச்சாடனருடையது போன்றதே. வேறுபாடுகள்:

 

பிச்சாடனர்

கங்காளர்

தலைக்கோலம்

சடை மண்டலம், சடை பாரம்

சடை மகுடம்

உடை

பிறந்த மேனியர்

உடை உண்டு

இடது பின் கை

கழுத்தின் பின்னால் குறுக்காக சூலம்

கங்காளத்தை குத்தி வைத்த தண்டம் அல்லது சூலம். மயில் பீலிகளால் அலங்காரம்.

இடது முன் கை

தொங்கல்

கங்காளம் எனும் உடுக்கை போன்ற டக்கம்.

வலது முன் கை

மானுக்குப் புல்

கங்காலத்தை மீட்டும் பாணம் எனும் சிறு கோல்.

வலது பின் கை

உடுக்கை

மானுக்குப் புல்


சிற்பங்கள்

௬-2- - கங்காளரின் இந்த சிற்பத்தில் விஷ்வக்சேனரின் உடல் சூலத்தின் வலப்பக்க மும்முனைக்குப் பின்னால் குத்தித் தொங்குகிறது. இந்த சிற்பத்தில் மட்டுமே இவ்வாறு உடல் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. மற்ற சிற்பங்களில் விஷ்வக்சேனரின் உடல் சூலத்தில் தெளிவாக இல்லாமல் குறியீடாகத்தான் காட்டப்பட்டுள்ளது. மரபுக்கு மாறாக கங்காளர் இங்கு பிறந்த மேனியராக உள்ளார்.

௬-2-அ-கங்காளர்.
தேர் கிழக்கு முக மண்டபம் தெற்குத் தூண்

௬-2-ஆ - இன்னொரு கங்காளர் சிற்பம். மரபுக்கு மாறாக கிரீட மகுடம். அடுத்தப் பக்கத்தில் இரு பெண்கள் ஆடை நழுவ நின்றுள்ளனர்.

௬-2-ஆ-கங்காளர் கிரீட முடி திருமண மண்டபம் தூண் தெ1மே1

௬-2-இ, ஈ - இங்கு குள்ள பூதம் அடுத்த சதுரத்திற்கு நழுவி உள்ளது. அங்கு ஒரு அழகிய மண்டபத்தில் ஆடை நழுவ இரு பெண்கள். ஒருத்தி அகப்பையால் குள்ள பூதம் சுமக்கும் பிச்சைப் பாத்திரத்தில் உணவு இடுகிறாள்.

௬-2-இ-கங்காளர்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ5கி2

௬-2-ஈ-முனிபத்தினிகள், குள்ள பூதம்.
பொன்மலைநாதர் 36 கால் மண்டபம் தூண் வ5கி2

௬-2-உ - இன்னொரு கங்காளர் சிற்பம்.

௬-2-உ-கங்காளர்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் தெ1கி3



௬-3. பிச்சாடனர் கங்காளருடன் 
முனிபத்தினிகள், பெண்கள், தேவர், முனிவர்

பல தூண்களில் முனிபத்தினிகள், பெண்கள் பிச்சாடனர் கங்காளர் உள்ள சதுரங்களுக்குப் பக்கத்துச் சதுரங்களில் பல நிலைகளில் பல எண்ணிக்கைகளில் உள்ளனர். நடு மேல் சதுரங்களில் வணங்கி அல்லது போற்றி நிற்கும் தேவர்கள் முனிவர்கள் ஆகியோர் உள்ளனர். சில நடு மேல் சதுரங்களில் பெண்களும் உள்ளனர். பெண்கள் நழுவும் ஆடையைக் கையால் பற்றி உள்ளனர். அவர்களில் சிலர் அகப்பையில் உணவு ஏந்தி உள்ளனர். வெவ்வேறு விதமான கொண்டைகள் அழகிய ஆடை அணிகலன்கள் அணிந்துள்ளனர். பிச்சாடனர் கங்காளரை நோக்கி நடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.

௬-3-ஆ - இரு பெண்கள். இடப்பக்கக் கொண்டை. இரு காதுகளில் கடிப்புகள். ஒரு கையால் நெகிழ்ந்து நழுவும் ஆடையைப் பற்றிய படி இடது கையில் உணவு அகப்பையைப் பிடித்துள்ளனர்.

௬-3-அ-பெண்கள் இருவர் அகப்பையுடன்.
36கால் மண்டபம் தூண் வ3கி2

௬-3-ஆ - தோள் மீது கைப் போட்டுக் கொண்டு. ஆடை நழுவி முழங்காலுக்குக் கீஏ சென்று விட்டதை கவனிக்காமல் தன்னிலை மறந்துள்ளனர். கைகளில் அகப்பைகள். ஒரு பெண்ணின் தனித்துவமான முடி அலங்காரம்.

௬-3-ஆ-இரு பெண்கள் தோளில் கைப்போட்டபடி.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி1

௬-3-இ - உப்பரிகையில் இரு பெண்கள். ஒருத்தி வலக்கைச் சுட்டுவிரலை உயர்த்தி ஏதோ சொல்ல மற்றவள் வலக்கை உயர்த்தி போற்றுகிறாள்.

௬-3-இ-உப்பரிகையில் இரு பெண்கள்.
திருமண மண்டபம் தூண் தெ3மே1

௬-3-ஈ - நழுவும் ஆடையைப் பிடித்துக்கொண்டு நடந்து செல்லும் இரு பெண்கள். மேற்கொண்டை. அகப்பை இல்லை.

௬-3-ஈ-முனிபத்தினிகல் ஆடை நெகிழ அகப்பை இன்றி.
திருமண மண்டபம் தூண் தெ1மே1

௬-3-உ - குள்ள பூதம் பிச்சைப் பாத்திரத்துடன். பிச்சையிடும் ஒரு பெண். மற்றவள் இடுப்பில் குழந்தையுடன் நிற்கிறாள்.

௬-3-உ-குள்ள பூதம் பிச்சை பாத்திரத்துடன், 2 பெண்கள், ஒருவர் இடுப்பில் குழந்தையுடன்.
உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2வ1

௬-3-ஊ - இரு பெண்கள்.

௬-3-ஊ-இரு பெண்கள் பொன்மலைநாதர்.
36கால் மண்டபம் தூண் தெ1கி3

௬-3-எ - மூன்று பெண்கள். ஆடைகளை முற்றிலும் இழந்து நிற்கின்றனர். இருவர் கைகளால் பிறப்பு உறுப்பை மறைக்க, ஒருத்தி மட்டும் வந்திருப்பவன் இறைவன் என உணர்ந்து தலை மேல் இரு கைக் கூப்பி உள்ளாள்.

௬-3-எ-ஆடைகளை முற்றும் இழந்த மூன்று பெண்கள் தேர் கிழக்கு முக மண்டபம் தெற்குத் தூண்

௬-3-ஏ  - அகப்பையோடு ஒரு பெண். தமிழம் என்னும் பின்பக்கக் கொண்டை.

௬-3-ஏ-ஒற்றைப் பெண் தமிழம் கொண்டையுடன் பொன்ம்லைநாதர் முக மண்டபம் தூண் வ3கி1

௬-3-ஐ - நடுச்சதுரம் ஒன்றில் மேகம் மீது இரு பெண்கள் நிற்கின்றனர். ஒருத்தி கையில் மாலை. ஆடை நழுவவில்லை. இவர்களை மேல் உலகப் பெண்களாகக் கொள்ளலாம்.

௬-3-ஐ-நடுச் சதுரத்தில் மேகம் மீது இரு பெண்கள்.  ஒருத்தி கையில் மாலை.
 தேர் கிழக்கு முக மண்டபம் தெற்குத் தூண்

௬-3-ஒ  - இரு முனிவர்கள் வணங்கி நிற்கின்றனர்.

௬-3-ஒ-வணங்கி நிற்கும் இரு முனிவர்கள்.
தேர் கிழக்கு முக மண்டபம் தெற்குத் தூண்

௬-3-ஓ - இரு முனிவர்கள். ஒருவர் தலைமேல் கைக்கூப்பி வணங்கி நிற்க மற்றவர் கையில் பெரிய மாலை.

௬-3-ஓ-இரு முனிவர்கள் ஒருவர் வணங்க மற்றவர் கையில் பெரிய மாலை.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி1

௬-3-ஔ - ஒரு முனிவரும் ஒரு கின்னரரும் போற்றிப் பாடுகின்றனர்.

௬-3-ஔ-போற்றிப் பாடும் முனிவரும் கின்னரரும்.
தேர் கிழக்கு முக மண்டபம் தெற்குத் தூண்


Comments