அறிமுகம்
இந்த வலைப்பூ தேவிகாபுரம் கோயில்கள் - சிற்பக் கலை மற்றும் கட்டடக் கலை' என்ற நூலிற்கு துணை செய்ய உருவாக்கப்பட்டது.
“கிருஷ்ணாபுரம், தாடிக்கொம்பு, தாரமங்கலம் ஆகிய சிற்பக் களஞ்சியங்கள் வரிசையில் சேர்த்துக் காணத் தக்கது தேவிகாபுரத்து சிற்பக் களஞ்சியமாகும்” என்று பேராசிரியர் செ. வைத்தியலிங்கன் தனது ‘சிற்பக்கலை’ என்ற நூலில் கூறுகிறார். அவர் குறிப்பிடுவது தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலை. அது தவிர அங்கு உள்ள பொன்மலைநாதர் கோயில், காம ஈசுவரர் கோயில், கற்பக விநாயகர் கோயில் ஆகியவையும் சிறப்பு வாய்ந்தவை. சில தனி மண்டபங்களும் உள்ளன. இந்த நான்கு விஜயநகர காலத்துக் கோயில்களின் சிற்பங்கள் கீழ்கண்ட தனித்துவங்கள் உடையவை.
1. சித்தர் சிற்பங்கள். பல்வேறு நிலைகளில் உள்ள சித்தர் சிற்பங்கள் பெரியநாயகி பொன்மலை நாதர் கோயில்களின் பல பகுதிகளில் நிறைந்திருக்கின்றன.
2. ஒற்றைக் கருத்துத் தூண்கள். பொதுவாக தூண் சதுரங்களில் காணப்படும் சிற்பங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக இருப்பதில்லை. தேவிகாபுரத் தூண்களில் ஒற்றைக் கருத்தைச் சுற்றி சிற்பங்கள் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரு தூண் அல்லது இரண்டு தூண்களின் அனைத்துச் சதுரங்களிலும், ஒரு தூணின் பல சதுரங்களில், ஒரு தூணின் ஒரு திசையில் உள்ள மேல்-நடு-கீழ்ச் சதுரங்களில், கீழ்ப் பக்க நான்கு சதுரங்களில் என ஒரு புராணக் கதையோ, தொடர்புள்ள சிற்பங்களோ அமைந்திருப்பதைக் காணலாம்.
3. ஒரு சிற்பம் வெவ்வேறு இடங்களில் ஒரே மாதிரியாக இல்லாமல் நுண்ணிய வேறுபாடுகள் கொண்டிருப்பது.
4. தூண்களில் மட்டுமின்றி கோபுரச் சுவர்கள், கோபுரப் பெருவாயில் சுவர்கள், நாசிகள், உபபீட கண்டம், கண்டத் # தூண் பாதங்கள், மதில் சுவர், போதிகைகள், கூரைப் பகுதி, விதானம், தேவகோட்டத் தோரணம் ஆகிய பல பாகங்களில் சிற்பங்கள் நிறைந்திருப்பது.
5. தூண்கள், உபபீடம், அதிட்டானம், தேவகோட்டங்கள், கூரை, முதலிய கட்டடப் பகுதிகளும் அழகாக செதுக்கப் பட்டிருப்பது.
6. பல தூண் வகைகள் காணக் கிடைப்பது.
மேற்கண்ட நூலின் இறுதிப் பகுதியில் தேவிகாபுரம் கோயில்களில் காணக் கிடைக்கும் வெவ்வேறு சிற்ப வகைகள் பட்டியல் இடப்பட்டு அவற்றுள் சிலவற்றிற்கான படங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இங்கு அந்தப் பட்டியலில் உள்ள அனைத்து சிற்பங்களுக்கும் படங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment