திருமால் அவதாரங்கள் - ௨. நரசிங்கம்
இரணியாட்சனின் உடன்பிறந்தவன் இரணியன். தன் தம்பி இரணியாட்சனை வராகமாகிக் கொன்ற திருமாலிடம் தீராப் பகை கொண்டான். கடும் தவம் இயற்றி மனிதர்கள் மிருகங்கள் தேவர்களாலோ, பகலிலோ இரவிலோ, விண்ணிலோ மண்ணிலோ, இருப்பிடத்தின் உள்ளேயோ வெளியேயோ, ஆயுதங்களாலோ மரணமில்லா வரத்தை நான்முகனிடம் இருந்து பெற்றான். தன் ஆற்றலால் மூவுலகையும் வென்றான். அவன் மகன் பிரகலாதனோ எதிரியிடம் பக்தி பூண்டு "அரி, அரி" என மனம், வாக்கு, மெய்யால் தொழுது நின்றான். அவன் மனதை அறிவுரை, தண்டனை எதனாலும் மாற்ற இயலாமல் போன இரணி்யன், 'எங்கே உன் அரி' என்று கொந்தளிக்க, தூணிலிருந்து வெளிப்பட்டது நரசிங்கம். இரணியன் பெற்ற வரங்களை மீறாமல் இரவும் பகலும் அற்ற செவ்வந்திப் பொழுதில், இருப்பிடத்தின் உள்ளோ வெளியோ இல்லாத வாயிலில், வானிலோ மண்ணிலோ இல்லாமல் தன் தொடை மீது இருத்தி, ஆழியோ, அம்போ, கதையோ, வேறு ஆயுதமோ இல்லாமல் இரண்யனின் வயிற்றைத் தன் நகங்களால் கிழித்து, அவன் கதையை கொடூரமாக முடித்தது மனிதனோ, மிருகமோ, தேவனோ அல்லாத நரசிங்கம்.
இரணியனைக் கொன்ற பிறகும் வெறி அடங்காது உலகை அச்சுறுத்திய நரசிங்கத்தை சிவன் சரப வடிவம் எடுத்து அமைதிப் படுத்தினார். (காண்க: சிவன் - சரபர்)
சிற்ப அமைதி
சிங்க முகமும் மனித உடலும் கொண்ட உருவம். 4, 6, அல்லது 8 கைகள். பின் இரு கைகளில் ஆழியும் சங்கும்.
சிற்பங்கள்
இரண்யன் - நரசிங்கம் கதை
இதன் முன் கதை வெளித் திருசுற்று பிள்ளையார் கோயில் தூணில் மட்டுமே உள்ளது.
௨-1 - பிரகலாதன் இரணியனை வழிபட மறுத்து திருமாலின் பெருமை கூறுதல்.
௨-2 - இரணியன் பிரகலாதனின் குருவுடன் ஆலோசித்தல்.
௨-3 - பிரகலாதன் திருந்த மாட்டான் என அறிந்து எங்கே உள்ளான் உன் அரி? என வினவ, எங்கும் உள்ளான் என பிரகலாதன் கூற, இந்தத் தூணில் உள்ளானா என்று ஒரு தூணைக் காட்டி இரணியன் கேட்பது. உள்ளான் என்று பிரகலாதன் கூறுவது.
௨-4 - இரணியன் அந்தத் தூணைத் தாக்கி உடைத்தல்.
௨-5 - தூணைப் பிளந்து வெளிவரும் நான்கு கை நரசிங்கம். பின் இரு கைகளில் ஆழி சங்கு, முன் இரு கைகள் தூணைப் பிளக்கின்றன.
௨-6 - அதே காட்சி. 4 கைகளுக்கு பதிலாக ஆறு கைகள். நான்கு கைகள் தூணைப் பிளக்கின்றனன.
௨-7 - வாள் கேடயத்தோடு இரு கை இரணியன்..
௨-8 - தப்பி ஓடப் பார்க்கும் இரணியனை ஆறு கை நரசிங்கம் பிடித்து இழுத்தல். இடது கைகள் மூன்றும் வலது கை ஒன்றும் இரணியனைப் பிடித்து இருக்க ஒரு வலது கை தண்டனைக் கையாய் ஒங்கியும், மற்ற வலது கை முட்டியை மடக்கியும் அவனைத் தாக்க ஆயத்தமாய் உள்ளன. இரணியன் வாள் கேடயத்தோடு இருக்க நரசிங்கத்திடம் ஆயுதங்கள் இல்லை.
இரணிய வதம்
நரசிங்கம் இரணியனைக் கொல்லும் காட்சி சிறு வேறுபாடுகளுடன் பல விதமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. பொதுவாக நரசிங்கம் வலது காலை சற்று மடித்து கீழே ஊன்றி இடது காலை மடியாக மடித்து அதில் இரணியனைக் கிடத்தி உள்ளது. இரு கைகள் அவன் தலையையும் காலையும் பிடித்து இருக்க, முன் இரு கைகள் அவன் வயிற்றைக் கிழிிக்கின்றன.. மற்ற கைகளின் எண்ணிக்கையும் அவற்றின் நிலைகளும் மாறுபடுகின்றன.
௨-9 – 8 கைகள். வலது கை ஒன்று தண்டனைக் குறி காட்ட, இடது கை ஒன்று வியப்புக் குறி காட்டுகிறது. மற்ற இரு கைகள் கழுத்தருகில் இரு விரல் நீட்டி குடலை உருவித் தூக்கும் நிலையில் உள்ளன. கைகளில் ஆயுதங்கள் இல்லை.
௨-10 – 8 கைகள். இரு கைகள் ஆழி சங்கு தாங்குகின்றன. இரு கைகள் தெளிவாக குடலை உருவித் தூக்கிப் பிடித்துள்ளன.
௨-11 – 8 கைகள். இரு கைகளில் ஆழி சங்கு. இடது கை ஒன்று மட்டும் குடலை உருவ வலது கை தண்டனைக் குறி காட்டுகிறது.
௨-12 – 10 கைகள். கூடுதல் இடது கை வாள் ஏந்திய இரணியனின் கையைப் பிடிக்க, கூடுதல் வலது கை தாக்கும் இரணியனின் படை வீரன் ஒருவனைப் பிடித்து வீசுகிறது.
௨-13 – 6 கைகள். மகுடம் இல்லை. இடது கை ஒன்று வாள் ஏந்திய இரணியனின் கையைப் பிடிக்க, தண்டனைக் குறி காட்ட வேண்டிய வலது கை உடைந்துள்ளது.
௨-14 - இராஜகோபுரப் பெருவாயிலில் உள்ள சிதைந்த சிற்பம். இரணியன் முகம், வாள் கேடயம் ஏந்திய கைகள் ஒரு கால் ஆகியவை தெளிவாகத் தெரிகின்றன. நரசிங்கத்தின் எட்டுக் கைகளில் நான்கு மட்டுமே தெரிகின்றன. இரண்டு இரணியனின் தலை கால்களைப் பிடித்து இருக்க இரண்டு இரு படைவீரர்களைத் தூக்கி வீசுகிறது, படை வீரர்களின் வாள் கேடயங்கள் தெளிவாகத் தெரிகின்றன. வயிற்றைக் கிழிக்கும் இரு கைகளும் குடலை உருவித் தூக்கும் இரு கைகளும் முற்றிலும் சிதைந்துள்ளன. ஆனால் இரு பக்கமும் இரு பிரி குடல் தெளிவாக உள்ளது.
மற்ற நரசிங்கம் சிற்பங்கள்
யோக நரசிங்கம்
௨-15- இரு கால்களையும் யோக பட்டத்தால் கட்டி யோக நிலையில் அமர்ந்துள்ள நான்கு கை நரசிங்கம்.
திரு நரசிங்கம்
௨-16 - திருமகளை இடது மடியில் அமர்த்தி முன் இடது கையால் அணைத்து நேரமர்வில் நான்கு கை நரசிங்கம். பின் கைகளில் ஆழி சங்கு. வலது முன் கையில் காத்தல் குறி.
௨-17 - வலது மடியில் அமர்ந்துள்ள திருமகள். நரசிங்கத்தின் முன் வலது கை திருமகளை அணைத்து இருக்க, முன் இடது கையில் வழங்கல் குறி. சுற்றி திருவாசி.
௨-18 - நின்ற நிலை நான்கு கை நரசிங்கம். முன் வலது கையில் காத்தல் குறி, இடது கை இடுப்பில்.
Comments
Post a Comment