சக்தி 5 - ௬.திருமகள், ௭. கலைமகள்

௬. திருமகள்


தொன்மம்

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி பாற் கடலை கடைந்த போது வெளிவந்த இறைவி. திருமாலின் முதன்மை மனைவி.

சிற்பங்கள்

கீழ்கண்ட வடிவங்களில் காணப்படுகிறார்.

௬-அ - திருமாலின் வலது புறம் இருக்கும்போது இடது கையில் மலர் ஏந்தி வலது கை தொங்க இரு கைகளுடன் தேவி வடிவத்தில் காட்சி தருகிறார். (காண்க தேவி).

௬-அ-திருமகள் திருமாலுடன் தேவி வடிவத்தில் நின்ற நிலை
16 கால் மண்டபம் தூண் கி1வ3

திருமகள் திருமால் இன்றி தனித்த தெய்வமாக நான்கு கைகளுடன் உள்ள சிற்பங்கள் பல தூண்களிலும் வாயில்களின் மேலும் காணப்படுகின்றன. பின் இரு கைகளிலும் தாமரைகளும் முன் கைகளில் காத்தல் வழங்கல் குறிகளுடன் காணப்படுகிறார்.

அமர்ந்த நிலை திருமகள்

௬-ஆ - அரைத்தாமரை அமர்வில் திருமகள் - தேனடை மகுடம். பின் இரு கைகளிலும் தாமரை. முன் கைகளில் காத்தல் வழங்கல் குறிகள்.

௬-ஆ-திருமகள் அரைத் தாமரை அமர்வு.
16கால் மண்டபம் தூண்கி1வ6

௬-இ - அரைத் தாமரை அமர்வில் திருமகள் இரு பக்கமும் கவரிப் பெண்களுடன்.

௬-இ-திருமகள் இரு கவரிப் பெண்களுடன்.
.தெற்கு மதில் வாயில் வெளிப்பக்கம்

௬-ஈ - நேரமர்வு திருமகள் -- அமர்வு தவிர மற்றபடி மேற்கண்ட சிற்பம் போன்றது.

௬-ஈ-திருமகள் நேரமர்வு.
பொன்மலைநாதர் பெருமண்டபம் வமே தூண்

வேழ திருமகள்

௬-உ - வேழ திருமகள் அரைத் தாமரை அமர்வு - அரைத் தாமரை அமர்வில் உள்ள திருமகளின் இருபுறமும் நீர்க்குடங்களை துதிக்கைகளில் தூக்கியபடி யானைகள். வேழம் = யானை.

௬-உ-வேழத்திருமகள் அரைத் தாமரை அமர்வு.
தெற்கு மதில் வாயில் வெளிப்புறம்

௬-ஊ - வேழத் திருமகள் நேரமர்வு - அமர்வு தவிர மற்றபடி மேற்கண்ட சிற்பம் போன்றது.

௬-ஊ-வேழத்திருமகள் நேரமர்வு.
வடக்கு மதில் வாயில் மேல் வேழ வரிசையில்

நின்ற நிலை திருமகள் 

௬-7 - நின்ற நிலை திருமகள் - பின் இரு கைகளிலும் தாமரை. முன் வலது கையில் காத்தல் குறி, முன் இடது கை இடுப்பில். (உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2வ3)



௭. கலைமகள்

நான்முகன் படைத்து அவர் மனைவியும் ஆகிய தெய்வம். அழகிய தோற்றம், வெள்ளை உடை, வெண் தாமரையில் அமர்வு, நான்கு கைகள், பின் கைகளில் அக்கமாலை, ஏட்டுச் சுவடி, வீணையை மீட்டும் முன் கைகள் என் கலைமகளின் உருவம் சித்தரிக்கப் பட்டுள்ளது. திருமண மண்டப முன் தூண் ஒன்றில் உள்ள ஒரு சிற்பம் மட்டுமே இதை ஒத்து உள்ளது. நேரமர்வு நான்கு கை பெண் தெய்வம், முன் இரு கைகளில் வீணை பின் இரு கைச் சின்னங்கள் தெளிவாகத் தெரியவில்லை. தவிர கலைமகள் நான்முகனோடு அன்னத்தின் மீது அமர்ந்து செல்லும் காட்சி சிவன் உமை திருமணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

௭-கலைமகள்.
 திருமண மண்டபம் தூண் தெ1கி1

Comments