நாயன்மார்கள் - ௫. கண்ணப்பர்
௫. கண்ணப்பர்
தொன்மம்
கண்ணப்பர் திண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்டவர். வேடர் குல இளவரசன். வேட்டை ஆடுவதில் வல்லவர். நாணன், காடன் என்ற தோழர்களுடன் வேட்டையாடச் சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தைக் கண்டார். இனம் புரியாத பேரன்பு அவருள் சுரந்தது. அந்நாள் முதல் வாயில் நீர் கொண்டு வந்து நீராட்டி, தலையில் சொருகி வந்த மலர்கள் இலைகளைச் சூட்டி, பன்றி இறைச்சியை தீயில் சுட்டு சுவை பார்த்து உண்ணப் படைத்தும் வந்தார். இதைக் கண்ட தோழர்கள் திண்ணன் இறைவன்பால் பைத்தியமானான் என்று அவனை விட்டு நீங்கிச் சென்றனர். மரபாக குடுமித் தேவரை வணங்கி வந்த சிவகோசரியார் என்ற அந்தணர் இறைச்சி இறைவனுக்குப் படைக்கப்படுவது கண்டு மனம் நொந்து இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணன் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி ஒழுகுமாறு செய்தார் சிவன். அதைக் கண்ட திண்ணன் பச்சிலைச் சாறை அதன் மீது இட்டார். அப்போதும் அடங்காத குருதியை நிறுத்த, தன் கண் ஒன்றை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். குருதி நின்றது. ஆனால் இடக்கண்ணில் குருதி வழியத் தொடங்கியது, திண்ணன் தனது மற்ற கண்ணையும் அகழ்ந்தெடுக்க எண்ணி, இலிங்கத்தின் இடக்கண் மீது அடையாளத்திற்காக தன் செருப்பு அணிந்த காலை வைத்தார். பின் இடக் கண்ணை அகழ்ந்து எடுக்க முயன்றபோது சிவபெருமான் ‘நில்லு கண்ணப்ப! நில்லு கண்ணப்ப! என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப!’ எனக் கூறி இலிங்கத்தில் இருந்து வெளிப்பட்டக் கையால் கண்ணப்பரின் கையைப் பிடித்து தடுத்தருளினார். ஆறே நாட்களில் சிவனடி அடைந்தார். இதை மாணிக்கவாசகர் ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மைக் கண்டபின் என்னப்பன் என்னையும் ஆட்கொண்டருளி’ என்றும் பட்டினத்தார் ‘நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்' என்றும் பாடியுள்ளனர்.
சிற்பக் கதை தொடர்
கண்ணப்ப நாயனாரின் கதை தேர் மைய மண்டபம் தூண் கி1தெ2 இல் தொடராக உள்ளது. தனிச் சிற்பங்களாக மற்ற இடங்களிலும் உள்ளது..
௫-1 - திண்ணன் வேட்டைக்குச் சென்றதைக் குறிக்கும் காட்டு விலங்குகள் காட்சி.
![]() |
௫-1-திண்ணன் காட்டிற்கு வேட்டைக்குச் செல்லுதல். தேர் மைய மண்டபம் தூண் கி1தெ2 |
௫-2 - திண்ணன் குடுமித் தேவரை வணங்கி நிற்பது.
![]() |
௫-2-திண்ணன் சிவலிங்கத்தை வணங்குதல். கையில் வில். பின்னால் அம்புகள் நிறைந்த தூணி. திருமண மண்டபம் தூண் தெ3கி2 |
௫-3 - திண்ணன் குடுமித் தேவருக்கு பூ இலை உணவு நீர் கொண்டுவரச் செல்வது.
![]() |
௫-3-குடுமி நாதரைக் கண்டு அன்புற்ற திண்ணன் வழிபட பொருட்கள் கொண்டு வரச் செல்லுதல். தேர் மைய மண்டபம் தூண் கி1தெ2 |
௫-4 - திண்ணன் குடுமித் தேவருக்கு பூ இலை சூட்டுவது.
![]() |
௫-4-திண்ணன் குடிமித் தேவருக்கு பூ இலை சூட்டுதல். தேர் மைய மண்டபம் தூண் கி1தெ2 |
௫-5 - திண்ணன் பன்றி இறைச்சியை தீயில் சுட்டு தான் சுவை பார்த்து குடுமித் தேவருக்கு உண்ணக் கொடுப்பது
![]() |
௫-5-திண்ணன் பன்றிக் கறியை தீயில் சுட்டு சுவை பார்த்து உண்ணக் கொடுத்தல். தேர் மைய மண்டபம் தூண் கி1தெ2 |
௫-6 - திண்ணன் இரவில் மரம் மீது அமர்ந்து குடுமித் தேவருக்கு காவல் காப்பது.
![]() |
௫-6-திண்ணன் இரவில் மரம் மீது அமர்ந்து காவல் காத்தல். தேர் மைய மண்டபம் தூண் கி1தெ2 |
௫-7 - குடுமித் தேவரின் வலது கண்ணில் இருந்து ஒழுகும் குருதியை நிறுத்த திண்ணன் தன் கண் ஒன்றை அப்புவது.
![]() |
௫-7-திண்ணன் சிவலிங்கத்தின் குருதி ஒழுகும் வலக்கண்மீது தன் கண்ணை அப்புவது. திருமண மண்டபம் தூண் தெ3கி2 |
௫-8 - குடுமித் தேவரின் இடது கண்ணில் இருந்தும் குருதி வழிய திண்ணன் தனது இரண்டாவது கண்ணையும் எடுக்க முனைவது. சிவன் நில்லு கண்ணப்ப என்று கைப்பிடித்துத் தடுப்பது.
![]() |
௫-8-நில்லு கண்ணப்ப என்று கண்ணாபரை தடுத்தல். தேர் மைய மண்டபம் தூண் கி1தெ2 |
௫-9 - மேற்கண்ட நிகழ்வின் இன்னொரு சிற்பம். இங்கு திண்ணன் அமர்ந்த நிலையில் இடது கண்ணை எடுப்பது.
![]() |
௫-9-நில்லு கண்ணப்ப என்று கண்ணப்பரை தடுத்தல். பெருமண்டபம் தெமே தூண் |
௫-10 - சிவனும் உமையும் விடைமேல் அமர்ந்து காட்சி கொடுப்பது.
![]() |
௫-10-சிவனும் உமையும் விடை மீது எழுந்தருளுதல். தேர் மைய மண்டபம் தூண் கி1தெ2 |
௫-11 - தேவரும் முனிவரும் வணங்கி நிற்பது.
![]() |
௫-11-தேவரும் முனிவரும் வணங்கி நிற்பது. தேர் மைய மண்டபம் தூண் கி1தெ2 |
Comments
Post a Comment