நாயன்மார்கள் - ௧. திருஞானசம்பந்தர், ௨. சுந்தரர்

நாயன்மார்கள், சைவக் குரவர்கள்

சிவனடியார்களில் சிறந்து விளங்கிய அறுபது பேரை பட்டியலிட்டு தமது திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி பாடினார். அவர்களோடு சுந்தரமூர்த்தி மற்றும் அவரது தாய் தந்தையர்களைச் சேர்த்து அறுபத்து மூவரின் வாழ்க்கை வரலாறுகளை சேக்கிழார் பெரிய புராணமாகப் பாடினார். இந்த அறுபத்து மூன்று சிவனடியார்கள் நாயன்மார்கள் என்று அழைக்கப் படுகின்றனர்.

நாயன்மார்களுள் மூவர் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் முதல் ஏழு திருமுறைகளான தேவாரத்தைப் பாடி உள்ளனர் - திருஞானசம்பந்தர் (1-3), திருநாவுக்கரசர் (4-7), சுந்தரர் (7). நாயன்மார்கள் பட்டியலில் இல்லாத மாணிக்கவாசகர் எட்டாம் திருமுறையான திருவாசகத்தைப் பாடி உள்ளார். இவர்கள் நால்வரும் சைவ சமயக் குரவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

அவர்களுள் சிலரது வரலாறு தூண்களில் சிற்பக் கதை தொடர்களாகவும் தனிச் சிற்பங்களாகவும் உள்ளன.

ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் சிவலிங்கத்தை வணங்கும் காட்சி காசி விசுவநாதர் சன்னிதி தெற்குத் தூணில் உள்ளது. ‘சிவலிங்க வழிபாடு’ பகுதியில் விவரிக்கப் ்பட்டுள்ளது.


௧. ஞானசம்பந்தர்

தொன்மம்

பொ ஆ 7 ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்தவர் ஞானசம்பந்தர். தனது மூன்றாவது வயதில் குளக்கரையில் தனித்திருக்க நேர்ந்த போது தாய் தந்தையை அழைத்து அழுதார். சிவன் உமையுடன் மனித உருவில் தோன்றினார். உமை ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டினார். குளத்தில் குளித்து மீண்ட தந்தை சம்பந்தர் வாயிலிருந்து ஒழுகும் பாலை கண்டு வினவ கோயிலைச் சுட்டிக் காட்டி தோடுடைய செவியன் என்று தொடங்கி பாடத் தொடங்கினார். சிவத் தலங்களுக்கு சென்று பதிகம் பாடித் தொழுது தனது பதினாறாம் வயதில் சிவனடி சேர்ந்தார்.

மயிலாப்பூரில் சிவனேசன் என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். அவரது மகள் பூம்பாவை பாம்பு கடித்து இறந்து விட எலும்புகளை குடத்திலிட்டு காத்து வந்தார். ஞானசம்பந்தர் மயிலாப்பூருக்கு வந்தபோது அந்தக் குடத்தை கோயிலின் முன் வைத்து ‘மட்டிட்ட புன்னை' என்று தொடங்கும் பதிகம் பாடினார். பூம்பாவை குடத்தில் இருந்து உயிருடன் வெளியே வந்தாள்.

ஞானசம்பந்தர் திருவோத்தூருக்கு (செய்யாறு) வந்தபோது அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்த சமணர்கள் அவருக்குத் தொல்லைகள் கொடுத்தனர். அவர்களை புனல் வாதத்தில் வென்றார். பிறகு அவர்கள் அறைகூவலை ஏற்று அங்குள்ள வேதபுரிநாயகன் கோயிலில் இருந்த ஆண் பனைகளை பதிகம் பாடி பெண் பனைகள் ஆக்கி குலை ஈன வைத்தார்.

சிற்பங்கள்

௧-1 - திருவாசியின் உள் ஞானசம்பந்தர். கைகளில் சிவனால் கொடுக்கப்பட்ட பொற் தாளங்கள்.

௧-1-ஞானசம்பந்தர்திருவாசியின் உள்.
உள் திருசுற்றின் முக மண்டபம்

௧-2 - திருவாசியின் உள் நடனம் ஆடும் ஞானசம்பந்தர்.

௧-2-திருஞானசம்பந்தர் நடனம்.
மதில் பிள்ளையார் சன்னிதி தெற்குத் தூண்

௧-3 - ஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தல்.

௧-3-ஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்பிப்பது.
பெருமண்டபம் தெமே தூண்

க-4 - ஞானசம்பந்தர் திருவோத்தூரில் ஆண் பனையை பெண் பனை ஆக்குவது.

௧-4-ஞானசம்பந்தர் திருவோத்தூரில் ஆண் பனையை பெண் பனை ஆக்குவது-
பெருமண்டபம் தெமே தூண்



௨. சுந்தரர்

தொன்மம்

பொ ஆ எட்டாம் நூற்றாண்டில் நாவலூரில் பிறந்தவர் சுந்தரர். இயற் பெயர் நம்பி ஆரூரன். எழிலான தோற்றம் காரணமாக சுந்தரர் என்று அழைக்கப் பட்டார். அவர் திருமணத்தை தடைசெய்து சிவன் தனக்கு அடியார் ஆக்கிக் கொண்டார். சிவனோடு தோழன் போன்ற உறவைக் கொண்டிருந்தார். பல சிவத் தலங்களுக்குச் சென்று பதிகம் பாடி வழிபட்டார். சிவன் அனுப்பிய வெள்ளை யானை மீது ஏறிச் சென்று கயிலாயம் அடைந்தார்.

தற்போது அவினாசி என்று அழைக்கப்படும் ஊரின் முற்பெயர் திருப்புக்கொளியூர். சுந்தரர் அங்கு சென்றபோது அந்தணச் சிறுவன் ஒருவனை முதலை விழுங்கியது அறிந்தார். சிவன் மீது பதிகம் பாடி அந்த முதலை சிறுவனை உயிரோடு உமிழச் செய்தார்.

சிற்பங்கள்

௨-1 - சுந்தரர். மகுடம் பட்டாடையுடன் அலங்காரமாக இருப்பவர் சுந்தரர்.

௨-1-சுந்தரர்-மதில் பிள்ளையார் தெற்குத் தூண்

௨-2 - சுந்தரர் முதலையிடம் இருந்து அது விழுங்கிய சிறுவனை மீட்பது. (சுந்தரர் ஞானசம்பந்தர் போலக் காட்டப்பட்டு உள்ளார்.)

௨-2-சுந்தரர் முதலையிடம் இருந்து சிறுவனை மீட்பது.
பெருமண்டபம் தெமே தூண்

36 கால் மண்டபத்தின் தூண் வ2கி5 இல் மேற்கு நடுச் சதுரத்தில் ஞானசம்பந்தரும், முதலை விழுங்கிய சிறுவனின் தந்தையும் நிற்கும் காட்சி இருக்க, மேல் சதுரத்தில் முதலை வாயில் இருந்து சிறுவன் வெளிவரும் காட்சி உள்ளது.


Comments